கோலாலம்பூர், டிச 18 – உணவகத்தில் புகைப்பிடித்ததற்காக வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசானுக்கு அபராதத்திற்கான குற்றப்பதிவு வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு எதிராக Kompaun நோட்டிஸ் இன்று வழங்கப்படும் . உணவகத்தில் புகைப்பிடித்த குற்றத்திற்காக குற்றப்பதிவை வழங்கும்படியும் அதற்கான அபராதத்தை செலுத்த முன்வருவதாகவும் முகமட் ஹசான் கேட்டுக்கொண்டது அவரது நேர்மையை காட்டுவதாக சுல்கெப்லி தெரிவித்தார். உணவகத்தில் முகமட் ஹசான் புகைப்பிடிக்கும் புகைப்படம் X தளத்தில் வெளியானது.
சுகாதாரத்திற்கான 2024 ஆம் ஆண்டின் புகைப்பிடிக்கும் தாயாரிப் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்டம் (852 சட்டம் ) எவருக்கும் விதிவிலக்கல்ல என நேற்று சுல்கெப்லி கூறியிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி 852 சட்டத்தை அமல்படுத்துவதில் விருப்பு வெறுப்பு எதுவும் காட்டப்படாது என அவர் சுட்டிக்காட்டினார். 2018ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட புகையிலை வருமான கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் புகைப்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் எவராவது புகைப்பிடிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது கூடியபட்சம் இரண்டு ஆண்டு சிறை விதிக்கப்படலாம். அதே வேளையில் புகைப்பிடிப்பதற்கு தடை என்ற அறிவிப்பை வைக்கத்தவறிய வர்த்தக உரிமையாளருக்கு 3,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறுமாதம்வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.