உணவக மேஜை நாற்காலியை லோரியால் மோதித் தள்ளிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு

நெகிரி செம்பிலான், பிப் 6 – சிரம்பானிலுள்ள உணவகத்திற்கு வெளியே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த பொதுமக்களை, லோரி ஒன்று மோதித் தள்ள முயலும் காணொளி ஒன்று வைரலானதை அடுத்து, அந்த லோரியை செலுத்திய ஆடவனை விசாரணைக்காக போலீஸ் தேடுகிறது.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரை புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதை, சிரம்பான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நண்டா மாரோப் உறுதிப்படுத்தினார்.
எனினும், அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தாமான் பெர்மாய் 3-விலுள்ள உணவகம் ஒன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள போதும், எப்பொழுது அது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.
முன்னதாக, உணவகத்தில் பொதுமக்கள் சிலர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த சமயத்தில், ஆடவன் ஒருவன் திடீரென அலட்சியமாக லோரியை பின்நோக்கி செலுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடையும் காணொளி ஒன்று வைரலானது.
அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்ற போதிலும், பொதுமக்களின் கண்டனத்துக்கு அது இலக்கானது.