கோலாலம்பூர், நவம்பர்-27 – பள்ளிச் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகளின் விலைகளை உயர்த்தும் முன், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள் கலந்துபேச வேண்டும்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) அவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால், உணவுகளின் விலைகளை அவர்கள் விருப்பம் போல் உயர்த்த முடியாது.
பள்ளி நிர்வாகத்துடன் கையெழுத்திட்ட டெண்டர் குத்தகை ஒப்பந்தக் கூறுகளுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டுமென்பதை, அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
விலைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள உணவு மற்றும் பானங்களின் விலைகளுக்கு ஏற்பவே, சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள் விற்பதை உறுதிச் செய்ய வேண்டியது, தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் பொறுப்பாகும்.
அடுத்தாண்டு கச்சா பொருட்களின் விலைவாசி மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுவதால், நாட்டிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களின் சுமையைக் குறைக்க கல்வி அமைச்சு வைத்துள்ள திட்டம் குறித்து முன்னதாக மக்களவையில் கேட்கப்பட்டது.
அது குறித்து பேசிய ஃபாட்லீனா, சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களுக்கு உதவ அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகச் சொன்னார்.
2020-ல் அவர்களுக்கு 1,500 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது; அதே ஆண்டில் மார்ச் முதல் நவம்பர் வரை வாடகைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது போன்றவற்றை அவர் உதாரணம் காட்டினார்.