உணவு விலை ஏற்றத்தினால் அதிகமான மக்களின் சிக்கன உணவாக ரொட்டி சானாய் மாறியுள்ளது
ஜோகூர் பாரு, மே 11 – உணவு விலை ஏற்றத்தினால் அதிகமான மக்கள் தங்களது நண்பகல் உணவாக ரொட்டி சானாய்க்கு மாறிவருகின்றனர். ஜோகூர் பாரு உட்பட முக்கிய நகர்களில் இதற்கு முன் 24 மணி நேரம் செயல்பட்ட உணவகங்கள் அல்லது மாமாக் உணவகங்கள் காலை பசியாறும் வேளையில் மட்டுமே ரொட்டி சானாய்களை வழங்கி வந்தன. மதிய உணவு வேளையில் நாசி கண்டார் அல்லது காய்கறிகளுடன் Nasi Champur வழங்கும் வழக்கத்தை உணவகங்கள் கொண்டிருந்தன. கோவிட் 19 – தொற்றின்போது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டபோது உணவு வேளையில் மக்கள் ரொட்டி சானாய் உட்கொள்ளும் போக்கு அதிகரித்தது.
தற்போது ரொட்டி சானாய் விலை குறைவாக இருப்பதால் இப்போது மதிய உணவு வேளையில் பெரும்பலான மக்களின் விருப்ப உணவாக ரொட்டி சானாய் மாறிவிட்டதாக ஜோகூர் இந்திய முஸ்லீம் தொழில் முனைவர் சங்கத்தின் செயலாளர் Hussein Ibrahim தெரிவித்தார். இரண்டு ரொட்டி சானாய் மற்றும் பானங்கள் அருந்தினால் ஒருவருக்கு 5 ரிங்கிட் செலவாகும். அதுவே மதியவேளையில் உணவுக்கு 10 ரிங்கிட் அல்லது 12 ரிங்கிட் அதற்கும் மேலாக செலவு செய்ய வேண்டியிருப்பதால் சிக்கனத்தை கருதி மக்களின் அதிகமான விருப்ப தேர்வாக இப்போது ரொட்டி சானாய் இருப்பதாக Hussein Ibrahim சுட்டிக்காட்டினார்.