
கோலாலம்பூர், செப் 28 – தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையாக உருவாக்கியதைத் தொடர்ந்து, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ம.இ.கா அமைதிப் பேரணியை நாளை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நாளைய அமைதிப் பேரணியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன்.
அமைச்சர் உதயநிதியின் கருத்து இந்து சமயத்தைக் குறித்ததல்ல. இந்து சமயத்தை முன்னிறுத்திச் சில பழைமைவாதிகள் ஏற்படுத்திய சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்தது. பிறப்பினால் உண்டாக்கப்படும் ஜாதி வேற்றுமை சார்ந்தது என அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்களோடும் ம.இ.கா உறவுப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்புகிறதே தவிர, உரசல் போக்கை அல்ல.
எனவே இந்தச் சர்ச்சையை உள்ளூர் அரசியல் என்ற பார்வையில் பார்ப்பதே சாலச் சிறந்தது என்று நாம் கருதுகிறோம். எந்த வெளிநாட்டு அரசியலிலும் ம.இ.கா தலையிடாது என்ற நிலைப்பாட்டினாலும் பேரணியை ரத்து செய்வதாக விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.