உத்தரபிரதேசம், ஜூலை-3 – இந்தியா உத்தரபிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 116 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மரணமடைந்தவர்களில் ஏராளமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று சொற்பொழிவு முடிந்து மக்கள் மொத்தமாக வெளியேறிய போது அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு வெளியேறியதால் பலர் மிதிபட்டும் மூச்சுத்திணறியும் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
அச்சம்பவம் குறித்து விசாரிக்க உத்தர பிரதேச மாநில அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச அரசுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுமென்றார்.