கோலாலம்பூர், பிப் 13- உனது கனவுத் திருமணம் என்னவாக இருக்கும் ? திருமண வயதில் இருப்பவர்களைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டிருந்தால் பரவாயில்லை.
இதுவே, பள்ளிப் படிக்கும் மாணவர்களைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்க முடியுமா ? அதுவும் ஐந்தாம் படிவ SPM மாணவர்களின், வாய்மொழித் தேர்வுக்கு அந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
வாய்மொழி சோதனையில், ஒரு மாணவரின் கருத்தாற்றலும் , உயர் சிந்தனையாற்றலும் சோதிக்கப்படும். அந்த சோதனையில் கனவுத் திருமணம் பற்றி கேட்டால் , மாணவர் என்ன பேசக்கூடும் ? இவ்வாறு கடந்த சில தினங்களாக பெற்றோர்கள், மலாய் மொழி சோதனைக்கு தேர்வு செய்யப்பட்ட கேள்வி குறித்து தங்களின் ஆட்சேபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் கல்வி துணையமைச்சர் தியோ நி சிங்கும், 17 வயது மாணவர்களிடம் கேட்கப் பட வேண்டிய ஏற்ற தலைப்பு அதுவல்ல என கூறியிருக்கின்றார்.
அத்தகையை கேள்வி SPM வாய்மொழித் தேர்வில் கேட்கப்பட்டதா என கல்வியமைச்சு விளக்கம் தர வேண்டும். அந்த விவகாரம் உண்மையென்றால், அமைச்சு, பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.