லாஸ் ஏஞ்சல்ஸ், ஏப்ரல் 5 – ஓஷன்ஸ் லெவன் திரைப்படத்தின் காட்சியுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளை ஒன்று, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் அரங்கேறியுள்ளது.
கொள்ளையர்கள், எந்த ஆதாரமோ தடையமோ இன்றி, உயர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்திலிருந்து மூன்று கோடி அமெரிக்க டாலர் அல்லது 14 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான பணத்தை கொள்ளையிட்டு கம்பி நீட்டியுள்ளனர்.
அதனால், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அந்த கொள்ளை சம்பவம் எப்படி அரங்கேறியது என்பது தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய கொள்ளைகளில் ஒன்றாகும் அது கருதப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸின் சில்மார் பகுதியிலுள்ள, அதிநவீன பாதுகாப்பு எச்சரிக்கையுடன் கூடிய GardaWorld சேமிப்பு பெட்டகத்தில் அந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், அந்த பெட்டகம் உடைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. கூரை வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பணத்தை களவாடி தப்பிச் சென்றது, திங்கட்கிழமை காலை பெட்டகத்தை திறந்து பார்த்த போது தான் உரிமையாளருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெட்டகத்தில் பெரிய அளவில் பணம் வைக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு சிலருக்கு தான் தெரியும் என்பது, மேலும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.