
மூவார், ஏப் 10 – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செகாமட்டில் தனது உறவினரான 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், தற்காப்புவாதம் புரியும்படி வேலையில்லாத நபர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
41 வயதான குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கை அரசு தரப்பின் அதிகாரி தியானா நஜிஹா முகமது ஃபௌசி நிருபித்ததைத் தொடர்ந்து நீதிபதி சயானி முகமது நோர் ( Sayani Mohd Nor) இந்த முடிவை தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை அரசு தரப்பு ஆதாரத்துடன் நிருபித்துள்ளதால் தற்காப்பு வாதத்திற்கு தயாராகும்படி குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நீதிபதி கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தற்காப்பு வாதத்தை முன்வைப்பதற்கு ஜூன் 12 மற்றும் 13ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்தார். இன்னும் திருமணம் புரியாமல் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இரவு மணி 10.30க்கு செகாமட்டில் உள்ள ஒரு வீட்டில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 376 ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அந்த நபருக்கு அதிகபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.