சியோல், ஏப்ரல் 30 – தான் ஆர்டர் செய்த பானத்தில், straw எனப்படும் உறிஞ்சு குழாய் இணைக்கப்படாத காரணத்தால், தென் கொரியப் பெண் ஒருவரின் அடாவடியான செயல், இணைய வாசிகளின் கடும் கண்டனத்திற்கும், விமர்சனங்களுக்கும் இலக்காகியுள்ளது.
இம்மாதம் நான்காம் தேதி, Siheung நகரில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பானத்துடன் உறிஞ்சு குழாயை வைக்க வில்லை எனும் அற்ப விஷயத்திற்காக பெண் ஒருவர், உணவகம் ஒன்றை தொடர்பு கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட உணகவத்தின் மேலாளர் சம்பந்தப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு, தமது தரப்பு தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் வகையில், உறிஞ்சு குழாயுடன், இலவச கேக் ஒன்றையும் அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார்.
எனினும், டெலிவரி அல்லது விநியோகம் தாமதம் ஆனதால் சினமடைந்த அப்பெண், நேரடியாக உணவகத்திற்கு வந்து கத்தி கூச்சல் போட்டதோடு, சம்பந்தப்பட்ட மேலாளரை மண்டியிட்டு தன்னிடம் மன்னிப்புக் கேட்டுகுமாறு கூறியது, பலரை சினமடையச் செய்துள்ளது.
அச்சம்பவத்தால், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மேலாளர் மன உளைச்சலுக்கு இலக்காகி, உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பான ஐந்து நிமிட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, அப்பெண்ணின் செயலை பலர் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.
குறிப்பாக, “அது ஒரு சாதாரண விஷயம். அதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் தேவையா?” என பலர் கேள்வி எழுப்பியுள்ள வேளை ; ஒருவரை இழிப்படுத்திய குற்றத்திற்காக அப்பெண்ணின் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.