
வாஷிங்டன், செப்டம்பர் 12 – அமெரிக்கா, மிச்சிகனிலுள்ள, பண்ணை ஒன்றில் இருக்கும் பீனட் (Peanut) எனும் பெட்டைக் கோழி ஒன்று, உலகின் மிகவும் வயதான கோழி என, உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர் பதித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 28-ஆம் தேதி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெயர் பதித்த போது 20 வயது 272 நாட்களை எட்டியிருந்த பீனட்டுக்கு தற்போது வயது 21 ஆகும்.
எனினும், அந்த சாதனைக்கு பின் சுவாரஸ்யமான கதை ஒன்று இருப்பதாக கூறியுள்ளார் பீனட்டின் உரிமையாளரான மார்சி பார்க்கர் டார்வின் (Marsi Parker Darwin).
21 ஆண்டுகளுக்கு முன், அழுகிய கோழி முட்டைகளை, முதலை கூண்டில் வீச தயாராகியுள்ளார் டார்வின்.
எனினும், அந்த முட்டை ஒன்றிலிருந்து சத்தம் வந்ததை அடுத்து, அதன் மேல் ஓட்டை விலகிப் பார்த்த போது, அதில் குஞ்சு ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.
அப்பொழுது வெறும் 0.5 கிலோகிராம் எடையில் மிகவும் சிறிதாக காணப்பட்ட அதற்கு பீனட் என பெயரிட முடிவுச் செய்தார் டார்வின்.
எனினும், 21 ஆண்டுகளுக்கு பின்னர், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பீனட் இடம்பிடிக்குமென அப்பொழுது தாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை என டார்வின் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் தமது 21-வது பிறந்தநாளை கொண்டாடிய பீனட், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது.