கோலாலம்பூர், ஏப்ரல் 12 – உலகின் விவேகமான மாநகரங்கள் பட்டியலில் கோலாலம்பூர் 16 இடங்கள் முன்னேறி 73-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
நிர்வாக மேம்பாட்டுக் கழகம் IMD வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டுக்கான விவேக நகரங்கள் குறியீட்டில் (SCI) மொத்தம் 142 மாநகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதே கடந்தாண்டில் கோலாலம்பூர் 89-வது இடத்தைப் பிடித்திருந்தது.
இணையத்தில் டிக்கெட் வாங்கும் வசதி, வேலைத் தேடுவோரின் வசதிக்காக இணையத்தில் வேலை வாய்ப்புப் பட்டியல் வெளியீடு என KL-லின் குறிப்பிடத்தக்க அடைவுநிலை அந்த உயர்வுக்குக் காரணம் என SCI அறிக்கைத் தெரிவிக்கிறது.
குறிப்பாக, மருத்துவ ஆலோசனைச் சேவைக்கான Online முன்பதிவு, பொது போக்குவரத்துச் சேவையை மேலும் எளிதாக்கும் வகையிலான இணைய டிக்கெட் முறை ஆகியவை SCI-யின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அதோடு, சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், தலைநகர் பாதுகாப்பாக இருப்பது போன்ற அம்சங்களையும் அவ்வறிக்கைப் பாராட்டியுள்ளது.
ஆனாலும், போக்குவரத்து நெரிசல், ஊழல், காற்றுத் தூய்மைக்கேடு, வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள் ஆகியவை KL-லில் மிகவும் கவலையளிக்கும் விஷயங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவேக மாநகரங்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் Zurich தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அடுத்தடுத்த இடங்களை முறையே Oslo, Canberra, Geneva ஆகியவைப் பிடித்திருக்கும் நிலையில், ஐந்தாவது இடம் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ளது.