
ஒட்டாவா, மார்ச் 7 -உலகிலே அதிக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வயதைக் கொண்டாடியுள்ளன.கடந்தாண்டு மார்ச் 4-ஆம் தேதி கனடாவில், பெண் ஒருவர் தான் சுமந்திருந்த கரு முழு வளர்ச்சி பெறுவதற்கு 126 தினங்களுக்கு முன்கூட்டியே இரட்டை குழந்தைகளைப் பிரசவித்தார்.அப்போது அந்த குழந்தைகள் உயிர்பிழைக்காது என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், அக்குழந்தைகள் அந்த கணிப்பையும் தாண்டி ஓராண்டு பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கின்றன. அதையடுத்து Adiah , Adrial Nadaraja எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த குழந்தைகள் உலகிலேயே குறைந்த மாதங்களில் பிறந்த குழந்தைகளாக கின்னஸ்- உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கின்றன.
Adiah-வும், Adrial-லும் பிறக்கும்போது முறையே 330 கிராம், 420 கிராம் எடையை மட்டுமே கொண்டிருந்தனர்.
மூளையில் ரத்தக் கசிவு, உடலில் தொற்று, சுவாசப் பிரச்சனை என கடுமையான உடல் பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்த அந்த குழந்தைகள், தீவிர கண்காணிப்புக்குப் பின்னர் 6 மாதங்கள் கழித்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டன.
தற்போது அந்த குழந்தைகள், பிறக்கும்போது இருந்த எடையைக் காட்டிலும் 18 மடங்கு அதிக எடை கூடியிருப்பதோடு உடல் நலமும் தேறியிருப்பதாகவும் , குழந்தைகளின் தாயாரான Shakina Rajendram தெரிவித்தார்.