
கோலாலம்பூர், செப் 20 – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலைகள் உயர்த்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் சந்தைகளுக்கு சென்று அரிசி விலைகளை கண்காணிக்க வேண்டும் என தாம் பணித்துள்ளதோடு இந்த விவகாரத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை உயராது என நமக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதோடு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை பிரச்னையும் முறையாக கவனிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என அவர் வலியுறுத்தினார். அதோடு வெங்காய விலை உயர்வு குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்தியாவிலிருந்து வரும் வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். பொதுவாகவே நாம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை நாம் வாங்குகிறோம். அதன் விலை உயர்வினாலும் நாம் பாதித்துள்ளோம். கடந்த மாதம் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கும் இந்தியா கட்டுப்பாடு விதித்ததாக நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால மறுஆய்வு அறிக்கை குறித்த விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது அன்வார் இதனை தெரிவித்தார்.