
புத்ரா ஜெயா, பிப் 4 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்காக உள்நாட்டு தொழிலாளர்களை நீக்கும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் எச்சரித்துள்ளார். வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் திட்டத்தை அரசாங்கம் தளர்த்தியதற்கு உள்நாட்டு தொரிலாளர்களை நிறுத்திவிட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதல்ல என்பதை முதலாளிகள் உணர வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
5 முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவே வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதே வேளையில் வெளிநாட்டு தொழிலாளர்களால் உள்நாட்டு தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படுவதற்கு அனுமதிக்க முடியாது என சிவக்குமார் தெரிவித்தார். தயாரிப்பு தொழில்துறை, கட்டுமானம், தோட்டம், விவசாயம் மற்றும் உணவங்கள் சேவைத்துறையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வதற்காக உள்நாட்டு தொழிலாளர்கள் நிறுத்தப்படுவதாக இதற்கு முன் அரசு சார்பற்ற இயக்கங்கள் கூறியிருந்தது குறித்து கருத்துரைத்தபோது சிவக்குமார் இதனை தெரிவித்தார்.