செந்தோசா, நவம்பர்-22 – நாட்டிலிருக்கும் இந்தியர் கிராமங்களை வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ள அரசாங்கத்தின் முடிவு வரலாற்றுப்பூர்வமானதென, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் வருணித்துள்ளார்.
சமூகப் பொருளியல் அனுகூலங்களை அனுபவிப்பதில் பின்தங்கியச் சமூகத்தை அரவணைத்து வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் முயற்சியை இது பிரதிபலிக்கிறது.
காலங்காலமாக கண்டுகொள்ளப்படாமலிருந்ததால், போதிய அடிப்படை வசதியின்மை, மோசமான சாலைகள், சரியான வடிகால் முறையில்லாததால் வெள்ளப் பிரச்னை, ஒன்றுகூடல் அல்லது விழா கொண்டாட்டங்களுக்கு மண்டப வசதி இல்லாதது போன்ற அவலங்களை இந்தியர் கிராமங்கள் எதிர்நோக்கி வந்தன.
தற்போது அமைச்சின் நேரடி பார்வையின் கீழ் வந்திருப்பதால், அவற்றுக்கு ஒரு வழியாக விடிவுகாலம் பிறந்துள்ளது.
இனி, அக்கிராமங்களுக்கான அடிப்படை வசதிக் கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் நில நிர்வாக நடைமுறைகளை மாவட்ட நில அலுவலகங்கள் எளிதாக்கி உதவ வேண்டும்.
அம்மேம்பாட்டுத் திட்டங்களின் அமுலாக்கங்களை கண்காணித்து கிராம வாழ் மக்கள் நன்மையடைவதை உறுதிச் செய்யும் தமது கடப்பாட்டையும் Dr குணராஜ் மறு உறுதிபடுத்தினார்.
47 இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் சந்தித்து பேசியப் பிறகு, இந்தியர் கிராமங்களை KPKT அமைச்சின் கீழ் கொண்டு வர அமைச்சரவை முடிவுச் செய்தது.