
சிகாமாட், மார்ச்-2 – 20,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் மலேசியா கினி செய்தியாளர் ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதாகியிருப்பது குறித்து, செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட மலேசிய ஊடக மன்ற சட்ட மசோதா, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் அநீதி இழைக்கப்படாமலும் பணியாற்றுவதை உறுதிச் செய்வதில் ஒரு முக்கியப் படியாகும்
அதே சமயம், ஊடகங்களின் சுதந்திரமும் பொறுப்போடு வர வேண்டும்.
செய்தியாளர்களும் தொழில் தர்மத்தைக் கடைப்பிடித்து மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமென அவர் சுட்டிக் கட்டினார்.
நியாயமற்ற காரணங்களுக்காக எந்தவோர் ஊடகவியலாளரும் தண்டிக்கப்படக் கூடாது; அதே சமயம் தவறிழைத்தது நிரூபணமானால் ஊடகத் துறையில் உள்ள மற்றவர்களுக்கு அது பாடமாக அமைய வேண்டும்.
இந்நிலையில் கைதான செய்தியாளர் நியாயமாக நடத்தப்பட வேண்டும்; அவரை மட்டும் விசாரிக்காமல் அவருக்கு லஞ்சம் கொடுத்தாகக் கூறப்படும் முகவரையும் MACC விசாரிக்க வேண்டும்.
அவர் அம்பலப்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர் கடத்தல் கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமென யுனேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அனைத்து ஊழல் வழக்குகளையும் MACC பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டுமென, லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அமைப்பான C4 வலியுறுத்தியுள்ளது.
மலேசியா கினி செய்தியாளர் கைது விவகாரத்தில் இப்போதே ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது எனக் கூறிய C4 தலைமை நிர்வாகி புஷ்பன் முருகையா, விசாரணை விரிவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றார்.
சம்பந்தப்பட்ட செய்தியாளர் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.