கெய்ரோ, டிசம்பர்-30, ஆப்ரிக்க நாடான எகிப்தின் பிரபல மார்சா ஆலாம் (Marsa Alam) உல்லாசத்தலத்தில் சுறா மீன் தாக்கி ஒரு சுற்றுப்பயணி மரணமடைந்த வேளை மற்றொருவர் காயமடைந்தார்.
எனினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை, எகிப்து சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவிக்கவில்லை.
வட மார்சா ஆலாமில் ஜெட்டிகளுக்கு அருகிலுள்ள நிர்ணயிக்கப்பட்ட நீச்சல் மண்டலத்திற்கு வெளியே ஆழமான நீரில் தாக்குதல் நடந்துள்ளது.
இதையடுத்து அங்கு நீந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதோடு, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஜெட்டிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்சா ஆலாம் உல்லாசத்தலமானது பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற ஒரு எகிப்திய கடற்கரை நகரமாகும்.
செங்கடலில் சுறா மீன்கள் மனிதர்களைத் தாக்குவது மிகவும் அரிது; ஆனால், எகிப்தில் கடந்த 18 மாதங்களில் நடந்துள்ள அத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
கடந்தாண்டு ஜூன் மாதம் மார்சா ஆலாமிற்கு வடக்கே செங்கடலில் உள்ள மற்றொரு கடலோர நகரத்தில் சுறா தாக்கி ஒரு ரஷ்ய நாட்டவர் கொல்லப்பட்டார்.