
பெட்டாலிங் ஜெயா, ஜன 3 – எங்களது ஆலய விவகாரத்தில் இனி வெளித் தரப்பினர் யாரும் தலையிட வேண்டாம். ஆலயம் எடுத்த முடிவுகளில் ஆட்சேபம் இருக்கும் தனிநபர்கள், சங்கத்தினர் ROS -சங்கப் பதிவு துறை உட்பட எங்குச் சென்றும் அது குறித்து புகார் கொடுக்கலாமென கூறியிருக்கின்றார், அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஜாலான் காசிங், சிவன் ஆலயத்தின் தலைவர் மஹாரதன்.
இவ்வேளையில், ஆலயத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதோடு ஆலயத்திற்குள் சக்கர நாற்காலிக்கும் தடையில்லை. ஆனால், மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் ஆலய அமைப்பைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு கருதி சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கு குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே செல்ல வாய்ப்பளிக்கப்படும். இந்த நிலைப்பாட்டிலிருந்து தங்களது ஆலய நிர்வாகம் ஒருபோதும் விலகப் போவதில்லை என மஹாரதன் மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தனது கணவரை , ஆலய மூலஸ்தானம் வரைச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சிவன் ஆலையத் தலைவருடன் , பெண்மணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி அண்மையில் வெளியாகி, இந்து சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதையடுத்து, அவ்விவகாரம் தொடர்பான உண்மை நிலையை எடுத்துக் கூறவும், பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஆலயத்தின் அமைப்பை சுற்றிக் காண்பிப்பதற்காகவும், சிவன் ஆலயம் இன்று செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவ்வேளையில், இந்த விவகாரத்தை இனியும் நீட்டித்து சர்ச்சையாக்க விரும்பாத தமது தரப்பு, பக்தர்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட ஆலயத்தின் சில விதிமுறைகளை , அனைவரும் மதித்து பின்பற்றி நடக்கும்படி மஹாரதன் கேட்டுக் கொண்டார்.