ஜோகூர்பாரு, பிப் 14 – ம.இ.கவின் பாரம்பரிய தொகுதிகளில் கை வைக்காமல் தேசிய முன்னணி நட்புறவு கட்சிகளுக்கு தொகுதி வழங்கினால் எந்தவொரு பிரச்சனையும் இல்லையென ம.இ.காவின் தேசிய தலைவரான டான்ஸ்ரீ SA Vicneswaran தெரிவித்தார். ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் அம்னோ அல்லது ம.சீ.ச கோட்டாவிலிருந்து தேசிய முன்னணி நட்புறவு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கலாம். தேசிய முன்னணி அம்னோ தொகுதிகளை நட்புறவு கட்சிகளுக்கு வழங்குவதற்கு பரிசீலிக்கலாம். எங்களது தொகுதிகளில் கைவைக்காதவரை எந்தவொரு பிரச்னையும் இல்லையென விக்னேஸ்வரன் கூறினார். ஜோகூரில் ம.இ.கா பணிப்படை அறிமுக நிகழ்ச்சியை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
ம.இ.காவின் பாரம்பரிய தொகுதியான Gambir மற்றும் Kahangகை மாற்றிக்கொள்வது தொடர்பில் அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது குறித்து வினவப்பட்டபோது தேசிய முன்னணி உணர்வின் அடிப்படையில் தொகுதிகளை மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பாக தேசிய முன்னணியின் தலைவர் Ahmad Zahid Hamidi யிடம் தாம் விவாதித்து வருவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.