எஜமானரின் நாயை அடித்தே கொன்ற மியன்மார் நாட்டு வீட்டுப் பணிப்பெண் மீது சிங்கப்பூரில் மிருகவதை குற்றச்சாட்டு
சிங்கப்பூர், ஆகஸ்ட் -28 – எஜமானரின் நாயை அடித்தே கொன்ற மியன்மார் நாட்டு வீட்டுப் பணிப் பெண், மிருக வதைக்காக ஒருவழியாக சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வைத்து அக்குற்றத்தைப் புரிந்ததாக 25 வயது Junny Lal Awn Pui மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
13 வயது poodle ரக நாயான ‘Boyboy’-யை அப்பெண் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளார்.
நாயின் கழுத்தைப் பிடித்து இழுத்தது, தரையில் அடித்தது, தலையில் பலங்கொண்டு தாக்கியது என மனிதாபிமானம் இல்லாமல் அவர் நடந்துக் கொண்டுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாயை கொளுத்தும் வெயிலில் நாயை கட்டித் தொங்க போட்டும் அவர் வேடிக்கைப் பார்த்துள்ளார்.
ஆனால், தம் மீது கொண்டு வரப்பட்ட 4 குற்றச்சாட்டுகளில் மூன்றை ஒப்புக் கொள்வதாகவும், நாயைக் கட்டித் தொங்கப் போட்டதாகக் கூறப்பட்ட நான்காவது குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோருவதாகவும் Junny Lal கூறினார்.
அதை செய்யச் சொன்னதே தனது எஜமானர் தான் என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கறிஞரை வைக்காமல் தன் சார்பில் அவரே வாதாடுகிறார்.
வீட்டில் நாயின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட CCTV கேமராவின் அக்கொடுமைகள் பதிவாகி முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சட்டதிட்டத்தின் படி, முதல் தடவை குற்றவாளி என்ற பட்சத்தில் Jully Lal-க்கு அதிகபட்சம் 18 மாதங்கள் சிறைத்தண்டனையும் 15,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்படலாம்.