
சென்னை, ஆகஸ்ட் 2- எஞ்சாயி எஞ்சாமி பாடல் குறித்து தொடர்ந்து வரும் சர்ச்சைக்கு பாடகி தீ விளக்கமளித்திருக்கின்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் எஞ்சாய் எஞ்சாமி பாடல் கடந்தாண்டு வெளியாகி மிக பிரபலமானது.
ஆனால், அப்பாடலுக்கு முக்கிய காரணமாக இருந்தவரான தெருக்குரல் அறிவுக்கு , உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ள வருகின்றன.
அந்த வகையில், அண்மையில், சென்னை, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் அப்பாடலை, தீ பாடியிருந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் அறிவு இடம்பெறவில்லை . அதையடுத்து பலரும் அறிவு புறக்கணிப்படுகிறாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழும்பியிருந்தனர்.
சில தினங்கள் கழித்து, உறங்கும்போது உங்களது சொத்துக்களை பிறர் அபகறித்துக் கொள்ளலாம். விழித்திருக்கும்போது முடியாது. உண்மையே வெல்லும் என பாடகர் அறிவு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடிருந்த பதிவு வைரலானது.
இந்த நிலையில் , சந்தோஷ் நாரயணன் தனது சார்பில் விளக்கமளித்திருந்த நிலையில், தற்போது தீயும் விளக்கம் அளித்திருக்கிறார்.
“எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
மேலும், எஞ்சாய் எஞ்சாமி பாடலின் மூலம் கிடைத்த அனைத்து வருமானமும் உரிமைகளும் தங்கள் மூவருக்கு இடையில் சரிசமமாகப் பகிரப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.