
சென்னை , ஆகஸ்ட் 1 – ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் புகழ் அறிவு, மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறாரா ? அல்லது உரிய அங்கீகாரம் அவருக்கு தரப்படவில்லையா?
தற்போது மீண்டும் அந்த சர்ச்சை தலை தூக்கியிருக்கின்றது.
அனைத்துலக அளவில் பிரபலமாகி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முணுமுணுத்த பாடல் ‘எஞ்சாய் எஞ்சாமி’. ஆனால் , அப்பாடல் வெளியான தொடக்கத்தில் இருந்தே , அப்பாடல் உருவாக முக்கிய காரணமாக இருந்த அறிவு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டன. தற்போது மீண்டும் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டிருப்பதாக, அண்மைய சில தினங்களாக அவரது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், எஞ்சாய் எஞ்சாமி பாடலை பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் பாடியிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பாடகர் அறிவு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்டதே தவிர வேறெந்த விளக்கமும் தரப்படவில்லை.
இவ்வாறு இருக்க, அறிவு தமது சமூக வலைத்தளத்தில் முக்கிய குறிப்பொன்றை பதிவிட்டிருப்பது பலரது கவனத்தை பெற்றிருக்கின்றது.
நீண்ட அந்த பதிவில், ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமின்றி , மன அழுத்தத்துக்கு மத்தியில் உழைத்திருக்கின்றேன்.
நீங்கள் உறங்கும் போது உங்களது சொத்துக்களை பிறர் அபகறித்துக் கொள்ளலாம் . ஆனால், விழித்திருக்கும் போது முடியாது. ஜெய்பீம் . இறுதியில் உண்மையே வெல்லும் என பதிவிட்டிருக்கின்றார்.
அந்த பதிவு, அவர் செஸ் ஒலிம்பியாட்டில் இடம்பெறாததற்காக எழுதப்பட்ட பதிவா ? அல்லது யாரை குறிப்பிட்டு சொல்கின்றார் என்பது தெரியவில்லை