
சென்னை , பிப் 22- அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈ.பி.எஸ் எனப்படும் எடப்பாடி பழனிசாமி சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டதால் அது சரியானது என்பதோடு அம்முடிவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினால் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அ.தி.மு.க அவரது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. ஓ. பன்னீர் செல்வம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இறுதி வெற்றியை பெற்றுள்ளார். அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தின் தீர்ப்ப்பை நீதிபதி தினேஸ் மகேஸ்வரி வாசித்தார். ஜூலை 11 ஆம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. எனவே அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும். அந்த கூட்டத்தில் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் சரியானதுதான் , அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அந்த பொதுக் குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், இந்த தீர்ப்பினால் எடப்பாடி தலைமையில் இயங்கும் அ.தி.முக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்கு உள்ளாகியுள்ளது. அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஓ.பன்னீர் செல்வம் சட்ட போராட்டத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால் அவரது அரசியல் வாழ்க்கையில் இது கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி ஓ .பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அடுத்த கட்டமாக என்ன முடிவை எடுப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.