
பசிபிக் தீவுகளை சுற்றியுள்ள கடல் நீர் மட்டம், ஆண்டுக்கு நான்கு மில்லிமீட்டர் என்ற விகிதத்தில், சராசரி அளவை விட சற்று அதிகமாக உயர்ந்து வருவதாக, WMO – உலக வானிலை ஆய்வு மையம், கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் மீதான, 2022-ஆம் ஆண்டு தென்மேற்கு பசிபிக் அறிக்கையின் வாயிலாக அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனால், தாழ்வான பகுதியில் அமைந்திருக்கும், துவாலு (Tuvalu), சாலமன் தீவுக் கூட்டங்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.
அது காலப்போக்கில், பேரழிவை கொண்டு வரும் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், அதனால் விளை நிலங்களும், குடியிருப்பு பகுதிகளும் அழியக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், ஆறு மாதங்களுக்கு மேலாக, ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியிலும், பப்புவா நியூ கினியாவின் தெற்கேயுள்ள கடல் பகுதியிலும், அதீத வெப்ப அலைகள் நீடிப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வெப்ப அலை, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு, அப்பகுதியில் வெள்ளம், புயல் உட்பட 35 இயற்கை பேரிடர்கள் பதிவான வேளை ; அதனால் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.