கோலாலம்பூர், பிப் 3 – 6 வயதாகும் தமது பிள்ளைக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துவிட்டதாகக் கூறியுள்ளார் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின். PICKids எனும் சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும்போது, கைரி அதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கோவிட் தடுப்பூசி சிறார்களுக்கு பாதுகாப்பானது எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் தமது தரப்பு சவாலை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டாமென பல தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பெரியவர்களைப் போன்று, தடுப்பூசி போடாவிட்டால் சிறார்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாது என தாம் உத்தரவாதம் அளிப்பதாக கைரி குறிப்பிட்டார்.
இவ்வேளையில், சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக, நாட்டில் கோவிட் தொற்றுக்கான பாதுகாப்பு அரணை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும். அதன் வாயிலாக, அனைத்துலக எல்லையைத் திறப்பது, தனிமைப்படுத்தலை அகற்றுவது போன்ற தளர்வுகளை வழங்க முடியுமென்றாரவர்.