கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – 2020-ல் தாம் பதவி வீழ்த்தப்பட்டதற்கு டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியோ அல்லது அம்னோவோ காரணமல்ல என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் கூறியுள்ளார்.
மாறாக, அப்போதைய தனது கட்சியான பெர்சாத்துவின் பிடிவாதமே பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகக் காரணமென அவர் சொன்னார்.
“சாஹிட் ஹமிடியெல்லாம் என்னை வீழ்த்த முடியாது. தேர்தலில் தோற்ற அம்னோவால் எப்படி என்னை வீழ்த்த முடியும்?” என மகாதீர் எதிர்கேள்வி கேட்டார்.
கட்சியில் நம்பிக்கையை இழந்த ஒரு தலைவர், பெருமனதுடன் விலகிக் கொள்ள வேண்டும்; அதைத்தான் நானும் செய்தேன், என்னை யாரும் வெளியேற்றவில்லை என்றார் அவர்.
எனது ஆலோசனையை பெர்சாத்து கட்சி நிராகரித்ததால், நான் பதவி துறந்தேன் என மகாதீர் கூறினார்.
2020-ல் பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் விலகியதன் பின்னணியில் மூளையாக இருந்துச் செயல்பட்டதே தாம் தான் என சாஹிட் ஹமிடி சனிக்கிழமைக் கூறியிருந்தார்.
அம்னோ கட்சிப் பதிவை ரத்துச் செய்ய அப்போது மகாதீர் திட்டமிட்டதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேறு வழியின்றியே மகாதீரின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.