Latestவிளையாட்டு

என்னை மன்னித்து விடுங்கள்; குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர் – ஒலிம்பிக் சைக்கிளோட்டத்தில் ஷா ஃபிர்டாவுசை மோதிய ஜப்பானிய வீரர் உருக்கம்

தோக்யோ, ஆகஸ்ட்-13 – பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் உள்ளரங்கு சைக்கிளோட்டத்தில் ஷா ஃபிர்டாவுசை (Shah Firdaus) மோதியதற்காக ஜப்பானின் ஷின்ஜி நகானோ (Shinji Nakano) மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் தான் செய்த தவறுக்காக தனது குடும்பத்தை அதில் இழுக்க வேண்டாமென, டிக் டோக் பதிவில் அவர் உருக்கமாகக் கூறினார்.

கெய்ரின் பிரிவு இறுதிச் சுற்றில் நகானோவின் சைக்கிள் மோதி ஷா ஃபிர்டாவுசுடன் அவரும் கீழே விழுந்தார்.

இதனால் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பிலிருந்த ஃபிர்டாவுசுக்கு பதக்கம் பறிபோனது.

அதற்கு முழுக்க முழுக்க நகானோவே காரணம் எனக் கூறி மலேசிய நெட்டிசன்கள், அவரின் சமூக ஊடகப் பக்கங்களில் கடுஞ்சொற்களால் சினத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

பலரின் கருத்துகள் சற்று எல்லை மீறிப் போகவே, அச்செயலை நிறுத்துமாறு மற்ற மலேசியர்களாலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

விளையாட்டு ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டுமே ஒழிய இப்படி சண்டை சச்சரவுகளில் போய் முடியக் கூடாதென அவர்கள் கோரியிருந்தனர்.

இந்நிலையில், வரம்பு மீறிய கருத்துகளால் பொறுமையிழந்தவராய் ஷின்ஜி நகானோ அக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அப்பந்தயத்தில் முதலில் விழுந்ததென்னவோ கிரேட் பிரிட்டன் போட்டியாளர் ஜேக் கார்லின் (Jack Carlin) தான்.

ஆனால் நகானோவின் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழக்க, பின்னாலிருந்து அவர் ஷா ஃபிர்டாவுசின் சைக்கிளை மோதி இருவருமே கீழே விழுந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!