செப்பாங், ஆகஸ்ட் 30 – 12 ஆண்டுகளுக்கு முன்பு போர்ட் டிக்சனைச் (Port Dickson) சேர்ந்த மாலா வேலு , தனது நேப்பாளி நண்பரைப் பின் தொடர்ந்து நேப்பாள நாட்டிற்குச் சென்றவர் பல்வேறு இன்னல்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டு இன்று மலேசியா திரும்பியுள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவர் வந்திரங்கியதும் தனது மகளுடன் அவர் ஒன்றிணைந்த காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்தது.
நேப்பாளத்திற்கு சென்ற அவர், 10 ஆண்டுகள் வீட்டு அடிமைத்தனத்தில் சிக்கியது மட்டுமின்றி அடித்தல், பட்டினி மற்றும் கூட்டு பலாத்கார அச்சுறுத்தல்களாலும் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது ஆண் நண்பரின் பிடியிலிருந்து தப்பித்தவர், நேப்பாளத்தின் குடியேற்றச் சட்டத்திடம் சிக்கினார்.
நேப்பாளத்தின் குடியேற்றச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அதிக காலம் தங்கியதற்காக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 88,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், 2022ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி அன்று, மாலா வெல்லோவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த சிறைத்தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட மாலா வெல்லோ மீண்டும் மலேசியாவிற்கு திரும்பியிருக்கின்றார்.
மாலா வெல்லோவின் 37 வயது மகள் உமா, நேப்பாளத்தில் சிக்குவதற்கு முன்பு, 57 வயதான தனது தாயைக் கடைசியாகப் பார்த்தாக அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய உமா, தனது தாய் நாடு திருப்பியதற்கு உதவிய நேப்பாளத்தில் உள்ள மலேசியத் தூதரகம், அரசு சாரா நிறுவனமான புராஜெக்ட் லிபர்8 (Project Liber8), மைதி (Maiti), செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மாலாவின் இந்த வழக்கு மற்றவர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும், மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பாமல் இருக்கவும் நினைவூட்டும் ஒரு நல்ல படிப்பினை என்றார், மாலா நாடு திரும்புவதற்கு தொடக்கம் முதலே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட செனட்டர் சிவராஜ்.
இன்று காலை 6:48 மணியளவில் மாலா வேலு, நேப்பாளத்திலிருந்து அனைத்துலக கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.