
கோலாலம்பூர், மார்ச் 9 – எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 11 மணியளவில் தாம் அழைக்கப்பட்டிருப்பதை பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் உறுதிப்படுத்தினார். இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படலாம் என வெளியான ஆருடங்களுக்கு மத்தியில் தமது முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும் அவர் கூறினார். பெர்சத்து கட்சியின் ஆண்டுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவிருப்பதால் நேற்று பல கூட்டங்களில் தாம் கலந்துகொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.