பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-4, எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்த சிலாங்கூர் கால்பந்து வீரர் ஃபைசால் ஹலிம் (Faisal Halim) 2 மாதங்களுக்குப் பிறகு நேற்றிரவு மீண்டும் ஆட்டங்களுக்குத் திரும்பினார்.
சிலாங்கூர் FC – திரங்கானு FC அணிகள் மோதிய மலேசிய FA கிண்ண இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக (reserve) அவர் பட்டியலிடப்பட்டார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற அரங்கில் (MBPJ) ஆட்டத்திற்கு முந்தையப் பயிற்சியில் முகமூடியோடு ஃபைசால் பங்கேற்றதைக் கண்டு ரசிகர்கள் பெரும் கைத்தட்டலுடன் ஆரவாரம் செய்தனர்.
அவரின் நிலையைப் பார்த்து சிலர் கவலைத் தோய்ந்த முகத்தோடும் காணப்பட்டனர்.
திடலில் நுழைந்த கையோடு, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் மண்டியிட்டு வணங்கினார்.
முதல் 11 ஆட்டக்காரர்களில் ஒருவராக வைக்கப்படாவிட்டாலும், குணமடைந்த ஃபைசாலைப் பார்த்ததே பெரும் திருப்தி தான் என இரசிகர்கள் கூறினர்.
மே மாத தொடக்கத்தில் கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் ஃபைசால் எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளானார்.
இதனால் உடலில் ஏற்பட்ட தீப்புண் காயங்களைக் குணப்படுத்த அவர் இதுவரை 4 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.