தோக்கியோ, மே 10 – ஜப்பானிலுள்ள, பிரபல உணவு தயாரிப்பு நிறுவனமான பாஸ்கோ ஷிகிஷிமா (Pasco Shikishima), தனது தயாரிப்பிலான ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெள்ளை ரொட்டிப் பொட்டலங்களை மீட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் குறைந்தது இரு வெள்ளை ரொட்டி துண்டு பொட்டலங்களில், கருப்பு எலியின் உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தனது ஒரு லட்சத்து நான்காயிரம் வெள்ளை ரொட்டித் துண்டு பொட்டலங்களை மீட்டுக் கொள்வதாக பாஸ்கோ ஷிகிஷிமா அறிவித்துள்ளது.
ரொட்டித் துண்டு பொட்டலங்களில், எவ்வாறு எலியின் பாகங்கள் வந்தன என்பதை கண்டறிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ரொட்டியாக, பாஸ்கோ ஷிகிஷிமா நிறுவனத்தின் தயாரிப்புகள் திகழ்கின்றன.
எனினும், மாசடைந்த ரொட்டியை சாப்பிட்ட யாரும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் எதுவும் கிடைக்கவில்லை என பாஸ்கோ ஷிகிஷிமா கூறியுள்ளது.
தலைநகர் தோக்கியோவிலுள்ள தொழிற்சாலையில் அந்த ரொட்டித் துண்டுகள் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.