
கோலாலம்பூர், ஜூன் 1- எவரெஸ்ட் மலையின் மரண மண்டல பகுதி என வருணிக்கப்படும் ஆபத்து நிறைந்த உயரமான பகுதியில் மிகவும் அரிதாக மலேசிய மலையேறி ஒருவரை நேப்பாள ஷெர்பா Gelje காப்பாற்றியதாக நேபப்பாள அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மே 18 ஆம்தேதி 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் முயற்சியில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த மலையேறி ஒருவருக்கு வழிகாட்டியாக இருந்த 30 வயதுடைய ஷெர்பா Gilje இறுக்கமான கயிறை அவிழ்க்க முடியாமல் கடுமையான குளிரினால் மலேசிய மலையேறி ஒருவர் நடுங்கிக் கொண்டிருந்ததை கண்டுள்ளார்.
அப்போது குளிர் 30 செல்சியஸிற்கும் குறைவாக இருந்தது. அங்கிருந்து சுமார் ஆறு மணி நேரம் மேற்கொண்ட போராட்டத்திற்குப் பின் மலேசிய மலையேறியை 600 மீட்டருக்கு கீழ கொண்டுவருவதில் ஷெர்பா Gelje யும் மற்றொரு ஷெர்பாவான Nima Tahi Sherpa வும் உதவியுள்ளனர். மலையேறிகள் படுப்பதற்கு பயன்படுத்தப்படும் பாயில் சுற்றி அந்த மலேசிய மலையேறியை எங்களது மூன்றாவது முகாமிற்கு தூக்கிவந்தோம் என Gelje கூறினார். அதன்பிறகு ஹெலிகாப்டரை தொடர்புகொண்டு 7,162 மீட்டர் உயரத்திலிருந்து Base முகாமிற்கு அந்த மலையேறி கொண்டு வரப்பட்டார். அவ்வளவு உயரத்திலிருந்து மலையேறிகளை மீட்பது முடியாத காரியம். எனினும் அந்த முயற்சியில் தங்களது உயிரையும் பணயமாக வைத்து மலேசிய மலையேறியை இரண்டு ஷெர்பாக்கள் காப்பாற்றியிருப்பதாக சுற்றுலாத்துறை அதிகாரி Bigyan Koirala தெரிவித்தார். எனினும் சம்பந்தப்பட்ட மலேசிய மலையேறியின் பெயரை அந்த அதிகாரி வெளியிடப்படவில்லை.