
நேபால், மே 24 – அவாங் அஸ்கண்டார் அம்புவான் யாகூப்பின் உடலை, எவரெஸ்ட் மலையிலிருந்து கீழே கொண்டு வரும்போது பதிவுச் செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோவை பகிர்வதை உடனடியாக நிறுத்துமாறு, 2023 மலேசிய எவரெஸ்ட் செயலகம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள அந்த வீடியோ, அவாங் அஸ்கண்டார் உடலை மலையிலிருந்து கீழே கொண்டு வரும் போது பதிவுச் செய்யப்பட்டது அல்ல என்பதை ME2023 திட்டத்தின் தலைவர் அசிம் அபிப் உறுதிப்படுத்தினார்.
அவாங் அஸ்கண்டார் உடலை, எவரெஸ்ட் மலையிலிருந்து கீழே கொண்டு வரும் நடவடிக்கைகள் இன்று காலை தான் தொடங்கியுள்ளன. இன்றிரவு அது இரண்டாவது கேம்ப்பை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும், சம்பந்தப்பட்ட வீடியோ நேற்று தொடங்கி பரவலாக பகிரப்பட்டு வருவதை, அபிப் சுட்டிக் காட்டினார்.
அதோடு, உயிரிழந்தவரின் புகைப்படங்களை தாங்கள் இதுவரை யாருக்கும் பகிரவில்லை எனவும் அவர் சொன்னார்.
அதனால், துயரத்தில் இருக்கும் அவாங் அஸ்கண்டாரின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போலி வீடியோக்களை பகிர்வதை தவிர்க்குமாறு அபிப் கேட்டுக் கொண்டார்.