
கோலாலம்பூர், நவ 9 – சன் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கும் ஏபெக் (APEC) மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் நெருக்கடி குறித்து ஜோ பைடனுடன் அன்வார் விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மேற்கொண்டுவரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் சிறார்கள் உட்பட 10,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியான நிலையில் அமெரிக்க அதிபரை சந்திப்பதற்கு அன்வார் திட்டமிட்டுள்ளார்.
ஜோ பைடனுடன் அன்வார் சந்திப்பு குறித்த தேதி மற்றும் நேரம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஏபெக்கின் 21 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும் அதன் தலைவர்களின் மாநாட்டில் இஸ்ரேல் – பாலஸ்தீன நெருக்கடி குறித்து எழுப்பப்போவதாக அன்வார் இதற்கு முன் கூறியிருந்தார்.