
ஜொகூர், பத்து பஹாட்டிலுள்ள, மெர்டேக்கா ஏரியில் விழுந்த மைவி காரில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற நபர் ஒருவர் அந்த ஏரியில் குதித்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்தது.
43 வயது சுஹைனி முஹமட் சடாலி எனும் அந்நபர், முன்னதாக சம்பந்தப்பட்ட ஏரிப் பகுதியை காரில் வலம் வந்த போது, மூவர் பயணித்த மைவிக் கார் ஒன்று ஏரியில் விழுவதை கண்டுள்ளார்.
அக்காரை ஆடவர் ஒருவர் செலுத்திய வேளை ; பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அழுதுக் கொண்டே உதவிக் கேட்டு கூக்குரல் இட்டுள்ளார்.
அதனைக் கண்டவுடன் சற்றும் தாமதிக்காமல், ஏரியில் குதித்து அவர்களுக்கு உதவ முயன்றதாக சுஹைனி தெரிவித்தார். காரை செலுத்திய ஓட்டுனரை மீட்டு சுஹைனி கரை சேர்த்த வேளை ; அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்த இரு பெண்களும் மீட்கப்பட்டனர்.
நேற்று பிற்பகல் மணி 1.30 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், யாரும் காயமடையவில்லை. முன்னதாக, ஆற்றில் விழுந்த காரிலிருந்து சுஹைனி மூவரை காப்பாற்றும் புகைப்படங்கள் வைரலானதோடு, பலரது பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.