
ஈப்போ , பிப் 3 -ஏழு ஆண்டு காலம் இழுபறியாக இருந்து வந்த 70 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளிக்கான சாவியை இன்று கல்வி அமைச்சு ஒப்படைத்ததைத் தொடர்ந்து அப்பள்ளியின் சர்சைக்கு ஒரு முடிவு காணப்பட்டது. இதன்வழி அந்தப் பள்ளியின் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்பதோடு பழைய பள்ளியில் பயின்றுவரும் 127 மாணவர்களும் விரைவில் புதிய கட்டடத்தில் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளர் டத்தோ Masyati abang Ibrahim புதிய பள்ளிக் கட்டிடத்தின் சாவியை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். மிகவும் நவீன வசதியோடு கட்டப்பட்ட இப்பள்ளி குனோங் ராப்பாட் வட்டாரத்தில் சிறந்த பள்ளியாக திகழும் என அவர் தெரிவித்தார்.
புதிய கட்டிடம் இப்போது பள்ளியின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதால் பள்ளியை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என பள்ளி வாரியத் தலைவரான வழக்கறிஞர் வ. இளங்கோ தெரிவித்தார். இந்த பள்ளியில் பாலர் பள்ளியும் விரைவில் திறக்கப்படும் என அவர் கூறினார். குனோங் ரப்பாட்டில் பிரதான அம்பாங் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி ஆதரவு அளிக்கும்படி பள்ளியின் தலைமையாசிரியை சு. மாரியம்மாள் கேட்டுக்கொண்டார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கபட்ட குனோங் ராப்பாட் தமிழப்பள்ளியின் கட்டுமாணப்பணி நிறைவு பெற்று இன்று சாவி வழங்கப்பட்ட நிகழ்வு இவ்வாட்டாரத்திலுள்ள இந்திய சமூகத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரான உமா சங்கரி காளியப்பன் கூறினார்.