கோலாலம்பூர், ஆகஸ்ட்-18 – இணையப் பகடிவதை, deep fake உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை தெளிவாக வரையறுப்பது, விசாரணை அம்சங்களை வலுப்படுத்துவதற்காக தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, பிரதமர் துறை அமைச்சின் சட்ட விவகாரப் பிரிவு மற்றும் தேசிய சட்டத் துறை ஆகியவற்றை உள்ளடக்கி வரும் வாரத்தில் சிறப்புப் பணிக் குழு அமைக்கப்படுகிறது.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) இன்று இன்று காலை பண்டார் பாரு அம்பாங்கில் உள்ள ஏஷாவின் வீட்டுக்கு வருகைப் புரிந்த போது இவ்விவரத்தைப் தெரிவித்தார்.
சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரியின் மரணம் தொடர்பில் இணையப் பகடிவதைக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்ணுக்கு வெறும் 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது, இனியும் நடக்கக் கூடாது.
அச்சம்பவத்தை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, சட்ட அம்சங்களில் மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்களை அப்பணிக்குழு ஆராய்ந்து பரிந்துரை வழங்குமென ஃபாஹ்மி கூறினார்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் போது, காட்டப்பட வேண்டிய வலுவான ஆதாரங்கள் குறித்தும் அப்பணிக்குழு விவாதிக்கும் என்றார் அவர்.
இன்றைய வருகையின்போது, ஏஷாவின் தாயார் பி.ஆர்.புஷ்பாவிடம் தனது சொந்த நன்கொடையாக ஃபாஹ்மி நிதியுதவியும் அளித்தார்.
அப்போது ஏஷாவின் சகோதரி சுசிலா அப்பாவும் உடனிருந்தார்.
ஏஷாவின் மரணத்தைப் படிப்பினையாகக் கொண்டு, இணையம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்ய அரசாங்கம் எடுத்து வரும் சீரிய முயற்சிகள் குறித்து புஷ்பாவிடம் தெரிவிக்கப்பட்டது.
டிக் டோக் சுதாகரித்துக் கொண்டிருந்தால் ஏஷாவின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும்.
ஏதாவது சம்பவம் நிகழ்ந்து புகார் செய்யப்படுவரை டிக் டோக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.
Duty of care என்ற கோட்பாட்டை அவை மறந்து விடுகின்றன.
எனவே, சமூக ஊடகச் சேவை வழங்குநர்களுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டதும் இது போன்ற சம்பவங்களை ஆக்ககரமாகக் கையாள முடியும்.
குறிப்பாக போலிக் கணக்குகளின் அட்டகாசம் ஒழியும் அல்லது குறைக்கப்படுமென ஃபாஹ்மி நம்பிக்கைத் தெரிவித்தார்.