
சவூதி அரேபியாவின், Al Nassr கிளப்பில் இணைந்ததை அடுத்து, திடலிலும், திடலுக்கு வெளியிலும் புதிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். Mrsool Park-கிலுள்ள, Al Nassr வளாகம் வந்தடைந்த ரொனால்டோவிற்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. அவரை காண, பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். திடலுக்கு செல்வதற்கு முன், சக ஆட்டக்காரர்களை ரொனால்டோ சந்தித்தார். அதன் பின்னர் அரங்கை வலம் வந்த அவர், தாம் கையெழுத்திட்ட காற்பந்துகளை இரசிகர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி உருட்டி விட்டார்.
தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் உற்சாக வரவேற்பை வழங்கிய, அனைவருக்கும் ரொனால்டோ நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். “இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் நான் பெருகை கொள்கிறேன். ஐரோப்பாவில் எனது பணி முடிவடைந்து விட்டது. அங்குள்ள முக்கிய கிளப்பிற்கு விளையாடி பெரிய வெற்றிகளை நான் குவித்து விட்டேன். இனி ஆசியாவில் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராகவுள்ளேன்” என ரொனால்டோ கூறினார்.