
புவனேஸ்வர், ஜூன் 3 – கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு எதிர் தளத்தில் வந்துக் கொண்டிருந்த பெங்களூரு-ஹவ்ரா பயணிகள் ரயிலலை மோதியதில் 207க்கும் அதிகமானோர் மாண்டுள்ள நிலையில், 900க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் எண்ணிக்கை மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரு சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதோடு ரயில்கள் தடம் புரண்ட இடத்தில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கோர விபத்து தொடர்பான படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
அருகாமையிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், இரத்த தானம் செய்ய நூற்றுக்கணக்கானோரும் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.
இது இந்தியாவின் மிகப்பெரிய ரயில் விபத்தாக கருதப் படும் நிலையில் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழத குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.