
சிரம்பான், ஆகஸ்ட்டு 22 – போர்ட் டிக்சன், லூகுட்டில், சொந்த மகளை, சாகும் வரை அடித்து கொன்ற முன்னாள் இராணுவ வீரன் ஒருவனுக்கு, தூக்கு தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
41 வயது முஹமட் அப்துல்லா முஹமெட் எனும் அவ்வாடவனுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி அந்த தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
2018-ஆம் ஆண்டு, ஜனவரி 31-ஆம் தேதி, தாமான் விஸ்தா ஜெயாவிலுள்ள, வீடொன்றில், இரவு மணி 8.30-க்கும், 11.30-க்கும் இடைப்பட்ட நேரத்தில், அப்பொழுது ஒன்பது வயது மட்டுமே நிரம்பிய நூர் ஐனா நபிலா எனும் தனது சொந்த மகளை கொலை செய்ததாக அவ்வாடவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
திருமணம் ஆகி, நான்கு பெண் பிள்ளைகளுக்கு தந்தையும், முன்னாள் இராணுவ வீரனும் ஆகிய அவ்வாடவனுக்கு, குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவனது வழக்கறிஞர் கோரியிருந்தார்.
எனினும், மனிதாபிமானம் இன்றி கொடூர செயலை புரிந்த அவனுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அதனை தொடர்ந்து, சொந்த மகளை அடித்து, அவரது உடலில் 32 இடங்களில் வெளிக்காயங்களையும், உடல் உறுப்புகளில் இரத்தம் கட்டி செயலிழக்கும் அளவிற்கு உட்காயங்களையும் ஏற்படுத்திய அவ்வாடவனுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி, சிற்றவதைக்கு இலக்காகி சிரம்பான் துவான்கு ஜபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருதது குறிப்பிடத்தக்கது.