
கம்பார், மார்ச் 31 – ஒப்பந்தகால மருத்துவர்கள் மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் சாத்தியத்தை கைவிட்டு முடிந்தவரை அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் கேட்டுக்கொண்டார். மறியல் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவது தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதோடு சுகாதார அமைச்சு அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது என்று பேரா மாநில சுகாதாராத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அதன் ஆட்சிக் குழு உறுப்பினருமான சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
நீண்ட காலமாக இருந்துவரும் ஒப்பந்த கால பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது. இந்த ஆண்டு 1,500 ஒப்பந்த கால மருத்துவர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என்பதோடு கட்டம் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்குள் எஞ்சியுள்ள அனைத்து ஒப்பந்த கால மருத்துவர்களையும் நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். அதனை அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண சுமூகமான வழிகளை கையாள வேண்டும் என சிவநேசன் கேட்டுக்கொண்டார்.