
கோலாலம்பூர், மார்ச் 30 – ஒப்பந்தகால மருத்துவர்களில் 1,500 பேர் இவ்வாண்டு நிரந்தரமாக வேலையில் நியமிக்கப்படுவார்கள் என்பதால் அந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மேலவையில் தெரிவித்தார். ஒப்பந்தகால மருத்துவர்களை நிரந்தரமாக சேவையில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நீடிப்பதால் அவற்றை ஒரு ஆண்டில் தீர்க்க முடியாது. அனைத்து மருத்துவர்களையும் நிரந்தர சேவையில் சேர்த்துக்கொண்டால் ஒரு ஆண்டிற்கு நமக்கு 10 பில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது என அன்வார் கூறினார். எனவேதான் இவ்வாண்டு 1,500 மருத்துவர்களை நிரந்தர சேவையில் சேர்த்துக் கொள்வதற்கு நான் உறுதியளித்துள்ளேன். அடுத்த ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காணமுடியும் என பிரதமர் கூறினார்.