கோலாலம்பூர், பிப் 3 – நாட்டில் ஒமிக்ரோன் அச்சுறுத்தலை அடுத்து, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான SOP விதிமுறைகளில் சிறு மாற்றங்கள் இருக்குமென , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். மலாக்கா, சரவாக் மாநில தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்ட SOP – கள், கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவின. ஆனால், விரைந்து பரவக் கூடிய ஒமிக்ரோன் அச்சுறுத்தலை தற்போது எதிர்நோக்கியுள்ளதால், ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான SOP -களில் சிறு மாற்றங்கள் இருக்குமென அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தற்போது நாட்டில் அதிகரித்திருக்கும் கோவிட் தொற்று எண்ணிக்கையால் மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாமென கைரி கேட்டுக் கொண்டார். தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, கோவிட் தொற்றின் பாதிப்பு நாட்டில் கடுமையாகியிருக்கவில்லை என அவர் கூறினார்.