கோலாலம்பூர், பிப் 7 – நாட்டில் ஒமிக்ரோன் அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது அல்லது அவர்கள் சுழல் முறையில் வேலைக்கு வர அனுமதிப்பது குறித்து முதலாளிமார்கள் பரிசீலிக்கலாமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார் . தொழிலாளர்களுக்கு, வேலையிடம் பாதுகாப்பானதாக அமைய முதலாளிமார்கள் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதனிடையே , சுய கோவிட் பரிசோதனை கருவிகள், முகக் கவசங்கள் ஆகியவற்றையும் வாங்கிக் கொடுக்க முதலாளிமார்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அலுவலகத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க, காற்றோட்ட வசதியை மேம்படுத்துவதற்கான உதவியை முதலாளிமார்கள் அரசாங்கத்திடம் இருந்து பெற முடியுமென கைரி ஜமாலுடின் கூறினார்.