
பெட்டாலிங் ஜெயா, நவ 18 – அண்மையக் காலமாக அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் பெரும் சரிவை கண்டிருக்கும் நிலையில் தற்போதய ஒரு டாலருக்கு 4.7 ரிங்கிட் அளவிலே பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
ஆசியாவிலேயே, ஜப்பானின் யென்னுக்கு அடுத்து மலேசிய ரிங்கிட்தான் மிக மோசமான நாணய வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த அக்டோபர் 23ஆம் திகதி ஒரு டாலருக்கு எதிராக 4.7880 ரிங்கிட்டாக அது எட்டியது.
விரைவில் அது ஒரு டாலருக்கு 5 ரிங்கிட் நிலையை எட்டக்கூடிய சாத்தியம் உள்ளதை பல பொருளாதார வல்லுனர்கள் மறுக்கவில்லை.
ஏற்கனவே இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்திருக்கும் நிலையில், அந்நிலையை எட்டினால் அது கடும் விலையேற்றத்திற்கு வித்திடும் என பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மலேசியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பதாக கூறிய பேங்க் நெகாரா கவர்ணர் அப்துல் ரஷீத் கஃபூர், நாணய விகிதம் வேறுபல கூறுகளாலும்
நிர்ணயிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அனைத்துலக நாணயச் சந்தையில் மலேசிய ரிங்கிட்டின் நிலைத்தன்மையை உறுதி செய்ய பேங்க் நெகாரா நிர்வகிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.