
ஜோகூர் பாரு, பிப்ரவரி-5 – பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு வேறு சோதனை நடவடிக்கைகளில், 18 வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களை ஜோகூர் குடிநுழைவுத் துறைக் கைதுச் செய்துள்ளது.
ஜோகூர் பாரு, கம்போங் மஜிடீ, தாமான் அபாட் ஆகிய 2 இரவுச் சந்தைகளில் இரவு 7 மணி தொடக்கம் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைதான 18 பேரில் தலா நால்வர் சீன, தாய்லாந்து, சிரியா மற்றும் கம்போடியப் பிரஜைகள் ஆவர்; எஞ்சிய இருவர் முறையே வங்காளதேசி மற்றும் பாகிஸ்தானி ஆவர்.
40 வயது மதிக்கத்தக்க அனைவரும் அனுதாபத்திற்காக தங்களின் உடல் அங்கவீனத்தைக் காட்டி இரவுச் சந்தைகளில் வருவோர் போவோரிடம் காசு கேட்கின்றனர்.
அப்படி ஒரு நாளைக்கு சராசரியாக 600 ரிங்கிட் வரை அவர்கள் சம்பாதிக்கின்றனர்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைதாகி மேல் நடவடிக்கைக்காக செத்தியா துரோப்பிக்கா குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.