யொங் பெங், செப்டம்பர்-6 ஜோகூர், யொங் பெங்கில் ஒரு வாரமாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 76 வயது முதியவர், Taman Sri Wangi-யில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
புதன் கிழமை நண்பகல் வாக்கில், செம்பனைத் தோட்ட உரிமையாளர் அச்சடலத்தைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்தில் கிடந்த அடையாள ஆவணங்கள் அடிப்படையில், இறந்து கிடந்தவர் Kasnon Sabari என அடையாளம் கூறப்பட்டது.
அவரின் ஆடைகள், தனிப்பட்ட பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றோடு, குடும்பத்தாரும் சடலத்தை அடையாளம் காட்ட உதவினர்.
சடலம் இருந்த நிலையைப் பார்த்தால், நிச்சயமாக 4 நாட்களுக்கு முன்பே அவர் இறந்திருக்க வேண்டுமென போலீஸ் சந்தேகிக்கிறது.
குற்ற அம்சங்கள் எதுவும் அவரின் உடலில் காணப்படவில்லை.
உடல் அழுகிப் போனதால், பத்து பஹாட் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில், மருத்துவ ரீதியாக அவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
இதையடுத்து திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டது.