செராஸ், ஆகஸ்ட்-16 – கோலாலம்பூரில் ஒரே வகை சார்டின் பிரட்டல் சோறுக்கு (Nasi Goreng Sardin) வெவ்வேறு கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மாய்சூரியில் உள்ள உணவகமொன்றில் அந்த நாசி கோரேங் சார்டின் உணவின் விலை ஒரே நாளில் 1 ரிங்கிட் 50 சென் ஏற்றம் கண்டது, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) காதுகளுக்கும் எட்டியது.
உடனடியாக விசாரணையில் இறங்கிய அமைச்சு, சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடையிலிருக்கும் மெனு அட்டையில் நாசி கோரேங் சார்டினின் விலை 9 ரிங்கிட் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பொட்டலமாக வாங்கிச் சென்றால் கூடுதலாக 30 சென் விதிக்கப்படுவது KPDN அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஆனால், வைரலான ரசீதுகளில் முதல் நாளில் 7 ரிங்கிட் 80 சென்னும் மறுநாளில் 9 ரிங்கிட் 30 சென்னும் என விலைக் குறிக்கப்பட்டுள்ளது.
எனவே இரு ரசீதுகளையும் மேல் நடவடிக்கைக்காக, அந்த உணவகத்தின் மேலாளரரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டுச் சென்றனர்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, விலைப்பட்டியலை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்.
விலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்; இனியும் இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாதென்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
தனது தவற்றை உணவக நிர்வாகம் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கோரியதுடன், புகார்தாரரைத் தொடர்புக் கொண்டு விளக்கமளிக்கவும் தயாராக இருப்பதாக KPDN அறிக்கையில் கூறியது.