
கோலாலம்பூர், நவ 20 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கீகாரம் வழங்கும்படி ம.இ.கா விடுத்த கோரிக்கையை விவேகமான ஒன்றாக பார்க்க வேண்டுமே தவிர அது ஒரு மிரட்டல் அல்ல என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை ம.இ.கா கேட்டுக்கொண்டுள்ளது. ம.இ.காவின் 77ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் ம.இ.க அரசாங்க பதவிகளை கேட்கவில்லை. மாறாக இந்திய சமூகத்தை பாதிக்கும் விவகாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கை தேவை என்பதைத்தான் வலியுறுத்தினார் என ம.இகா தகவல் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 15ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என பேரரசர் விடுத்த ஆலோசனையை தொடர்ந்துதான் பல்வேறு அரசியல் கட்சிகளைக் கொண்டு இப்போதைய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள பிரதமர் அன்வார் , ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் இணக்கம் காணப்பட்ட விவகாரத்தில் கவனம் செலுத்தும் பொறுப்பையும் கடமையும் கொண்டுள்ளார். இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் தேவைப்படுவதாக ம.இ.கா தலைமையகத்திற்கு வந்திருந்தபோது பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார். பிரதமரே விவேகமாக நடந்துகொள்ளும்போது உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் தலைமைத்துவத்தில் நல்ல பெயர் அல்லது புகழ் கிடைப்பதற்காக அறிக்கை விடுவதை பிரபாகரன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தினாளன் கேட்டுக்கொண்டார்.